ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன்

ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் லக்ஷயா சென் 'சாம்பியன்' பட்டம் வென்றார். ஸ்காட்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கிளாஸ்கோ நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் வேகமாக ஏற்றம் கண்டு வரும் இந்திய வீரர் லக்ஷயா சென், பிரேசில் வீர யுகோர் கோல்ஹோவை சந்தித்தார். 56 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உத்தரகாண்டை சேர்ந்த 18 வயதான லக்ஷயா சென் 18க்கு21, 21க்கு18, 21க்கு19 என்ற செட் கணக்கில் யுகோர் கோல்ஹோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த 3 மாதங்களில் லக்ஷயா சென் கைப்பற்றிய 4வது பட்டம் இதுவாகும். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அவர் சார்லோர்லக்ஸ் ஓபன், நெதர்லாந்து ஓபன், பெல்ஜியம் ஓபன் பட்டங்களை வென்று இருந்தார். இந்த வெற்றியின் மூலம் லக்ஷயா சென் தரவரிசையில் 'டாப்40' இடங்களுக்குள் முன்னேறி இருக்கிறார். ஸ்காட்லாந்து ஓபன் பட்டத்தை வென்ற 4வது இந்திய வீரர் லக்ஷயா சென் ஆவார். ஏற்கனவே இந்தியாவின் ஆனந்த் பவார் (2010 மற்றும் 2012ம் ஆண்டு), அரவிந்த் பட் (2004), கோபிசந்த் (1999) ஆகியோர் இந்த பட்டத்தை வென்றுள்ளனர்.